ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: ஆட்சியரிடம் கையெழுத்து இயக்க மனுவை தொழிற்சங்கத்தினர் வழங்கினர்

ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: ஆட்சியரிடம் கையெழுத்து இயக்க மனுவை தொழிற்சங்கத்தினர் வழங்கினர்
Updated on
1 min read

சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் சு.அமிர்தஜோதியை சந்தித்தனர்.

அவர்கள், ஓய்வூதியர் நலன்சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட கையெழுத்து இயக்க மனுவை ஆட்சியரிடம் வழங்கி, அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில், மத்திய, மாநிலஅரசு பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு தலைவர் டி.பாலசுப்பிரமணியன், தொழிற்சங்கங்களில் மின்வாரியம் சார்பில் வி.ஜெகநாதன், அரசு ஊழியர்சார்பில் எட்டியப்பன், போக்குவரத்து சார்பில் நாகராஜன், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு விடுவிக்கும் தேதியிலேயே அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அளிக்க வேண்டும். முதல்வர் உறுதியளித்தபடி, வயது வாரியாக ஓய்வூதியத்தை உயர்த்திவழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம், மருத்துவப்படி ரூ.1,000,குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1.50லட்சம் என உயர்த்தி வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஓய்வூதியர் சங்கங்களையும் அழைத்து முத்தரப்பு ஒப்பந்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் வடிகால் பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஒரே அளவில் அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் அகவிலைப்படியை வழங்கவேண்டும். அவர்களுக்கு பண்டிகை முன்பணம், நிலுவை ஊதியத் தொகை உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும்.

குடிநீர் வழங்கல், போக்குவரத்து, மின்வாரியம் ஆகிய துறைகளில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இவை உட்பட பல்வேறுகோரிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in