Published : 18 May 2023 06:12 AM
Last Updated : 18 May 2023 06:12 AM
தாம்பரம்: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு விநியோகிக்க ரூ.535 கோடி கரன்சிகளை எடுத்துக் கொண்டு 2 கன்டெய்னர் வாகனங்கள் நேற்று மதியம் புறப்பட்டன. ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில்துப்பாக்கி ஏந்திய 17 போலீஸாரும் பாதுகாப்புக்காக இந்த வாகனங்களுடன் சென்றனர்.
இந்நிலையில், மதியம் 2.30 மணிக்கு தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனை அருகேசென்றபோது, இதில் ஒரு கன்டெய்னர் வாகனத்தில் இருந்துதிடீரென அதிக அளவு புகைவெளியேறியது. வேகம் குறைந்து, ஒருகட்டத்தில் அந்த வாகனம் நின்றுவிட்டது.
அந்த வாகனத்தில், பல கோடி ரூபாய் பணம் இருப்பதால், பாதுகாப்புக்காக சென்ற போலீஸார்முன்னெச்சரிக்கையாக 2 வாகனங்களையும் சூழ்ந்து நின்றனர்.
உடனடியாக, தாம்பரம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாம்பரம் போலீஸார் விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி, 2 வாகனங்களையும், அருகே உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்துக்குள் கொண்டு சென்று நிறுத்தினர். மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் பழுதடைந்த வாகனத்தை சரிசெய்யும் பணி நடந்தது. பழுதை சரிசெய்ய முடியாததால், ‘ரெக்கவரி டிரக்’ வாகனம் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன், பழுதடைந்த கன்டெய்னர் வாகனம் உள்ளிட்ட 2 வாகனங்களும் மாலை 6.15 மணிக்கு மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT