Published : 18 May 2023 06:31 AM
Last Updated : 18 May 2023 06:31 AM

வர்ணாசிரமத்தை கொண்டு வரவே பாஜக தீவிரமாக செயல்படுகிறது: சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த பட்டியலின- பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாட்டில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டியலின- பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

இம்மாநாட்டில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அய்யா வழி சமய தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், ரவிக்குமார் எம்.பி., மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியது: தலித் மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் சிவப்புக் கொடி உயர வேண்டும். உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் தலித் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

ஆணவப் படுகொலை அதிகரித்துள்ளது. இன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவிலும் பாஜக ஆட்சியில் அடித்தட்டு மக்களை நசுக்குகிற வேலையை செய்கிறது. வர்ணா சிரமத்தைக் கொண்டு வரும் செயலில்தான் பாஜக தீவிரமாக செயல்படுகிறது. பாசிச இந்துத்துவா கொள்கை கோட்பாடு உயர்ந்து கொண்டிருக்கிறது. அதை மேலும் உயர்த்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

கையால் மலம் அள்ளும் நிலை நாட்டில் பல இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கு எதிராக பல இன்னல்கள் பாஜக அரசில் நிகழ்கிறது. இந்தியாவிலேயே சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் நிலைமை மாறவில்லை. இதுபோன்ற மக்களுக்கு பொருளாதார ரீதியாக அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மாற்றம் செய்யப்படும்.

மோடி அரசாங்கம், தலித், முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்கான உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் வளங் களை கொள்ளையடித்து கொண்டிருக்கிற பாஜக அரசை வீழ்த்த வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது மதசார் பற்ற அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டுமென கூறினேன். கர்நாடக தேர்தலில் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகநீதி போராட் டத்தினை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு அதற்கு உதாரணமாக உள்ளது என்றார்.

இம்மாநாட்டில் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x