

திருநெல்வேலி: தமிழகத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருடன் தனது புகைப்படம் இருப்பது குறித்த சர்ச்சை தொடர்பாக மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலியில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 293 பயனாளிகளுக்கு ரூ.22.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யபட்ட ஏஜெண்டுகளாக உள்ளனர். அவர்களை அழைத்து கூட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்கு சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் மருத்துவம் படித்து பாதியில் தமிழகத்துக்கு திரும்பியவர்கள் பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அவர்கள் உள்நாட்டில் மருத்துவப் படிப்பை தொடர மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். நீட் தேர்வு இருப்பதால் அதனை செயல்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பான கேள்விக்கு, “எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர, தொழிலை மாற்ற மாட்டார்கள். சமூக விரோதிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காலத்தில், அப்போதைய முதல்வர் தூத்துக்குடிக்கு உடனே சென்று பார்க்கவில்லை. ஆனால், தற்போது முதல்வர் உடனே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றம் புரிந்தவர்கள் மீது எடுக்கப்படும். நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் பார்க்கப்படாது முதல்வர் கூறிவிட்டுள்ளார்” என்றார்.
விஷச் சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”திருமண நாள், பிறந்தநாள் போன்றவற்றுக்கு வாழ்த்து பெற வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்” என்று பதில் தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் மு. அப்துல்வகாப், ரூபி மனோகரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.