

சென்னை: பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரும் விண்ணப்பங்களை கையாள்வது தொடர்பாக விரிவான நடைமுறைகளை வகுத்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என பதிவுத் துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த, ராஜ சுலோச்சனா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட நில விற்பனைப் பத்திரத்தின் பதிவை ரத்து செய்யக் கோரி, மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பித்திருந்தேன். இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி நான் விண்ணப்பம் அளித்திருந்தேன். அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பத்திரப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விண்ணப்பம் அளித்து விட்டு, அதன் மீது விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க அவகாசம் வழங்காமல் வழக்கு தொடர்ந்தது நல்ல நடைமுறை அல்ல. இது ஊழலுக்கு வழிவகுக்கும். இதே கோரிக்கையுடன் பலர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, தங்கள் விண்ணப்பத்தின் மீது உத்தரவுகளைப் பெறுவது என்பது மற்ற விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இதுபோன்ற விண்ணப்பங்களுக்கு எண்கள் வழங்கி, அதை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்க வேண்டும். மூத்த குடிமக்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவசரமான விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுக்கலாம். அதற்கான காரணங்களை உத்தரவில் குறிப்பிட வேண்டும்.
மேலும், பத்திரப் பதிவை ரத்து செய்வது தொடர்பான விண்ணப்பங்களை கையாளுவது குறித்து விரிவான நடைமுறைகளை வகுத்து, அவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.