Published : 17 May 2023 06:05 PM
Last Updated : 17 May 2023 06:05 PM

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி வசிப்பவர்கள் இலவசமாக பயணிக்க புரோமோஷன் டிக்கெட்: விரைவில் அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி வசிப்பவர்கள் இலவசமாக பயணிக்க புரோமோஷன் டிக்கெட் வழங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சித்திக் சென்னையில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், "மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பல வழிகளில் பயணச் சீட்டு பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் டிக்கெட்டை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம். விரைவில் இந்தப் புதிய வசதியும் ஏற்படுத்தப்படும்.

வாட்ஸ்அப் மூலமாக எடுக்கப்படும் டிக்கெட் ஒருநாள் முழுவதும் செல்லும். ஆனால், ஒரு முறை அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அந்த டிக்கெட் காலாவதி ஆகிவிடும். சர்வர் பிரச்சினையால் டிக்கெட் பெற முடியவில்லை என்றால் பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் மூலம் ஒரே நேரத்தில் ஆறு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதனை நண்பர்கள், குடும்பத்தினர் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து அளித்து பயணிக்க முடியும் இது Transfer Ticket System முறை.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்கு பயணிக்கக் கூடிய இலவச மற்றும் கட்டண சலுகையிலான Promotional tickets வழங்க திட்டமிட்டுள்ளோம்.

எதிர்காலத்தில் கூடுதல் ரயில்கள் மற்றும் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். இதை செயல்படுத்த 4 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்பதால் உடனே செய்யமுடியாது. நான்கு பெட்டிகளுடன் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைப்பதற்கு அடுத்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.

முன்பை விட மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிகர லாபமும் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு முன்பாக மின்சார கட்டணங்களும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே செலவும் வருமானமும் சரி சமமாக உள்ளது.

கோவை மற்றும் மதுரை மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அதனை சமர்ப்பித்து அரசு ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான நீட்டிக்கும் பணி அரசு ஒப்புதலுக்கு பிறகு தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x