

மானாமதுரை: அதிகாரிகள், போலீஸாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
அவர் இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அதிகாரிகள், போலீஸாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே தெரியாமல் இருந்திருந்தால், ஒரே நாளில் கள்ளச் சாராயம் விற்ற 1,500 பேரை கைது செய்திருக்க முடியாது. முதல்வரும், போலீஸாரும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச் சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறில்லை.
பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது என்றும், மற்றவர்கள் வெற்றி பெற்றால் பிரிவினை வாதம் ஜெயித்தது என்றும் கூறுவது அபத்தமான கருத்து. கர்நாடகாவில் ஊழல் ஆட்சிக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸை வெற்றி பெற வைத்துள்ளனர். அதை ஜனநாயக ரீதியாக அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை போல் வருகிற 2024-ம் ஆண்டும் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும். தற்போதும் திமுக, காங்கிரஸ் இணக்கமாக உள்ளன. தேர்தல் சமயத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து இரு கட்சி தலைமையும் முடிவு செய்யும். மத்தியில் பாஜக ஆட்சி இனி தேவையில்லை என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்'' என்று அவர் கூறினார்.