குடும்ப பிரச்சினையில் குழந்தைகள் உரிமையை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

குடும்ப பிரச்சினையில் குழந்தைகள் உரிமையை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

Published on

மதுரை: குடும்ப பிரச்சினையில் குழந்தைகளின் உரிமை கோருவதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: 'நானும் கணவர் ஆனந்த்தும் பிரிந்து வாழ்கிறோம். என் இரு குழந்தைகளையும் கணவர் கடத்தி வைத்துள்ளார். என் மகன், மகளை மீட்டு ஆஜர்படுத்தி என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''இந்த வழக்கில் மனுதாரருக்கும் அவரது கணவருக்கும் 2022-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன், மனைவி பிரச்சினையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மகனுக்கு 18 வயதாகிறது. இதனால் அவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்க முடியாது. மகளுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. கணவர் மகளை கட்டாயப்படுத்தி தன்னுடன் அழைத்துச் சென்றதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

கணவன், மனைவி பிரச்சினையில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது. சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in