

சென்னை: மத்திய அரசு ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டுமென்று தீர்மானம் இயற்றியுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில், நாடு முழுவதும் ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் 45 இடங்களில்...: இதன்படி, 45 இடங்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். பின்னர், காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களிடையே அவர் உரை யாற்றினார்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அஞ்சல்துறை சார்பில் நடைபெற்ற ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய அரசின்பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 247 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அஞ்சல் துறையில் 158 பேரும், ரயில்வேயில் 60 பேரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் ஒருவரும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் 8 பேரும், பாதுகாப்புத் துறையில் 5 பேரும், கல்வித் துறையில் 15 பேரும் என மொத்தம் 247 பேர் பணிநியமன ஆணைகளைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் ஜே.சாருகேசி, அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) பி.பி.தேவி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் கே.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.