Published : 17 May 2023 06:12 AM
Last Updated : 17 May 2023 06:12 AM

விதிமீறல்களில் ஈடுபட்ட 8 கல்குவாரிகள் மீது நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் விதிகளை மீறிய 8 கல்குவாரிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீதான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையிலிருந்து கேரளா மாநிலத்துக்கு அனுமதியின்றி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார் மனுக்கள் வரப்பெற்றன. இதையடுத்து, மாநில எல்லைகளில், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய பல்வேறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சோதனைச் சாவடிகளில் 2022-23-ம் நிதியாண்டில், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரால் 33 வாகனங்கள், காவல்துறையினரால் 5 வாகனங்கள், பறக்கும்படையினர் மூலம் 1 வாகனம், கனிம வளத்துறையினர் மூலம் 32 வாகனங்கள் என மொத்தம் 98 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதிக பாரம் ஏற்றிச் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை 1,254 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்றதற்காக சிறப்பு பறக்கும்படையின் மூலம் 15 வாகனங்கள், கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அதிக பாரம் ஏற்றிச் சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 12-க்கும் மேற்பட்ட குவாரிகள் முழு சர்வே செய்யப்பட்டதில் 8 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உரிய அபராத நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குவாரிகளில் சர்வே செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x