

சென்னை: திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (20). பொன்னேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (16), 10-ம் வகுப்புமாணவர். இவர்கள் மேலும் 4 நண்பர்களுடன் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கல், சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளித்தனர்.
அப்போது, எழுந்த ராட்சத அலை 7 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் தப்பி வெளியே வந்த நிலையில், காந்த், ஹரிஷ் மற்றும் மற்றொரு கல்லூரி மாணவர் சந்துரு ஆகியோர் கடலில் மூழ்கினர்.
உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து 2 மாணவர்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ், காந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மாயமான மற்றொரு மாணவர் சந்துருவை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.