மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் நத்தம் மேம்பாலம்: இரவில் செல்ல தயங்கும் வாகன ஓட்டிகள்

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரையில் ரூ.612 கோடியில் கட்டப்பட்ட தமிழகத்திலேயே மிகநீளமான மதுரை - நத்தம் மேம்பாலத்தில், அடிக்கடி மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்ல தயங்குகின்றனர்.

மதுரை - நத்தம் நான்குவழிச் சாலை திட்டத்தில், மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்துஊமச்சிகுளம் அருகே மாரணி வரை 7.3 கி.மீ. தொலைவுக்கு, ரூ.612 கோடியில் அமைக்கப்பட்ட பறக்கும் பாலத்தை, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிதிறந்துவைத்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இந்த மேம்பாலத்தால், அப்பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

இந்நிலையில், மேம்பாலத் தூண்களிலும், மேம்பாலத்துக்கு மேலேயும் இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. இதனால் திறந்த புதிதில், இந்த பாலம் இரவில் ஜொலித்தது. வாகனங்களும் இரவில் சகஜமாக சென்று வந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக பாலத்தின் மேல் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரத்தில் பாலத்தில் சென்று வர வாகன ஓட்டிகள் தயங்குகின்றனர்.

இதையடுத்து, இரவு நேரத்தில் பாலத்தில் வாகனங்கள் செல்லாததால், வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனவே, புதிய மேம்பாலத்தில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்து, இரவில் பொதுமக்கள் சகஜமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாலத்தில் இரவில் அடிக்கடி போலீஸார் ரோந்து சென்று, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in