Published : 17 May 2023 06:11 AM
Last Updated : 17 May 2023 06:11 AM
வேலூர்: வேலூரில் இரண்டாவது நாளாக வெயில் 108 டிகிரி சுட்டெரித்த நிலையில் வெயில் கொடுமையால் பூ வியாபாரி சுருண்டு விழுந்துஇறந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் கடந்த சில நாட்களாக கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், படிப்படியான வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இந்தாண்டின் உச்சபட்ச அளவாக நேற்று முன்தினம் 108.1 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நேற்றும் வெயில் 108 டிகிரி சுட்டெரித்தது. நேற்று காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதற்கிடையில், வேலூர்பொய்கை அடுத்த சத்தியமங் கலத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பவர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பூ வியாபாரியான இவர் பொய்கை அருகே இரு சக்கர வாகனத்தில் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் இருந்த பள்ளமான பகுதிக்குச் சென்றுள்ளார்.
திடீரென அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற விரிஞ்சிபுரம் காவல் துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முருகன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புக்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் என்றும் கடுமையான வெயில் காரணமாக அவரது உடலில் நீர்ச்சத்து குறை பாடு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT