கட்டண பாக்கிக்காக சான்றிதழை வழங்க மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டண பாக்கிக்காக சான்றிதழை வழங்க மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கட்டண பாக்கிக்காக சான்றிதழை வழங்க மறுப்பதற்கு கல்லூரி நிர்வாகத்துக்கு உரிமையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த ஆர்ஷியா பாத்திமா, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் சேர்ந்தேன். கரோனா காலத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது. என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வெளிநாடு செல்வதற்காக என் கல்வி சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்தேன். படிப்பை பாதியில் விட்டுச் செல்வதால் ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் சான்றிதழ் தரமுடியும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. எனக்கு சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், படிப்பை பாதியில் விட்டுச் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என மாணவியிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதற்காக சான்றிதழ்களை வழங்காமல் இருக்க கல்லூரிக்கு எந்த உரிமையும் இல்லை. சான்றிதழ்களை பிடித்து வைத்துக் கொள்வதற்கு மாணவர்கள் கடன் வாங்குவோர் அல்ல. எனவே கல்லூரி நிர்வாகம் 10 நாளில் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும். மாணவியிடம் கட்டணத்தை வசூலிக்க கல்லூரி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in