Published : 16 May 2023 08:54 PM
Last Updated : 16 May 2023 08:54 PM

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்

சென்னை: சொத்துக்கள் முறையாக கணக்கிடப்படவில்லை எனக் கூறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ராஜீவ் கோலி என்பவர் சென்னை துறைமுகத்தில் 1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பைலட், டாக் மாஸ்டர், ஹார்பர் மாஸ்டர் போன்ற பணிகளில் பணியாற்றி வந்தார்.1990 முதல் 2000ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 27 லட்சத்து 23 ஆயிரத்து 475 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், இது அவரது வருமனத்தை விட 71.88 சதவீதம் அதிகமானது என சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2004ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலி கான் பிறப்பித்துள்ள தீர்ப்பில், சிபிஐ மற்றும் ராஜீவ் கோலி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வருமான விவரங்கள், வருமான வரி கணக்குகளின் அடிப்படையில், குறிப்பிட்ட ஆண்டுகளில் 26 லட்சத்து 53 ஆயிரத்து 270 ரூபாயை ஊதியமாகவே வாங்கியுள்ளார். இந்த ஊதிய வருமானம் மட்டுமின்றி பிற சொத்துகள் மூலமாக வாடகை வருவாய், வங்கி முதலீடுகளில் வட்டி மூலம் வருமானம் வந்துள்ளது. அவரது செலவுகளையும் கணக்கிட்டு, 4 லட்சத்து 73 ஆயிரத்து 683 ரூபாய் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தைவிட 9.37 சதவீதம் மட்டுமே அதிகம்.வேலையில் சேர்ந்தது முதல் ராஜீவ் கோலிக்கு சேமிப்பு பழக்கமும் இருந்துள்ளது.

27 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிய குற்றச்சாட்டுகளை, போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை எனக்கூறி, ராஜீவ் கோலியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். வருமானம் மற்றும் சொத்துகளை கூடுதலாக மதிப்பீடு செய்யாமல், முறையான வகையில் கணக்கீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது. மனுதாரரின் 20 ஆண்டுகால வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது.

தாமதத்திற்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை. இந்த வழக்கில் நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x