Published : 16 May 2023 07:46 PM
Last Updated : 16 May 2023 07:46 PM

தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்களுடன் கை குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தி.நகர் ஆகாய நடைபாதையினை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரங்கநாதன் தெருவில் 15 நிமிடங்கள் சென்று பொதுமக்களுடன் கை குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் ரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல் துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் தினமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவர்.

தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர், அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று பொதுமக்களிடம் கைகுலுக்கு, செல்பி எடுத்துக் கொண்டார். மேலும், அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x