Published : 31 Oct 2017 08:58 AM
Last Updated : 31 Oct 2017 08:58 AM

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா: 48 வகையான திரவியங்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம் - விழா நடத்த ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.7 லட்சம் நன்கொடை

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு சதய விழாக் குழு சார்பில் நேற்று மாலை அணிவிக்கப்பட்டது.

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவின் 2-ம் நாளான நேற்று காலை சதய விழாக் குழு சார்பில், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சதய விழாக் குழுத் தலைவர் துரை.திருஞானம், பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சதய விழாக் குழு சார்பில் பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் தலைவர் டாக்டர் வி.வரதராஜன், சென்னை அடையாறு பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இயக்குநர் சுவாமிநாதன் ஆகியோருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தஞ்சை ராஜ வீதிகளில் சுவாமி திருவீதியுலா, பத்மஸ்ரீ ஷோபனாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியது: பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதற்குக் காரணம் அவரது போர்த் திறன், ஆன்மிக அறிவு, கட்டிடக்கலைத் திறன், ஆளுமைத் திறன் ஆகியவையே. தமிழ் மண்ணின் பெருமையை உலகறியச் செய்த அந்த மன்னனுக்கு சதய விழா நடத்துவதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து ரூ.7 லட்சம் நன்கொடை பெறப்பட்டது. இது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பெறப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x