நில அளவர், வரைவாளர்கள் 922 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 922 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழக அரசின் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடந்ததேர்வில் நில அளவர் பணிக்கு 698 பேர், வரைவாளர் பணிக்கு 224 பேர் என மொத்தம் 922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 922பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 15 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ அசன் மவுலானா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறை செயலர் குமார் ஜெயந்த், நிலச் சீர்திருத்தத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் ந.வெங்கடாசலம், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டி.ஜி. வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருவாய்த் துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதுடன், மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதிலும், அரசின் பல்வேறுசமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் வருவாய்த் துறை விளங்குகிறது. இந்த துறையின் பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின்கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டப் பிரிவில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு, புதிய தொழில்நுட்பக் கல்வித் தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது பல்வேறுஆண்டுகளாக பட்டா வழங்குவதில் உள்ள சிரமங்களை நீக்கவும், நிலம்,நிலஅளவை சார்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு நிலஅளவை மற்றும் பதிவேடுகள்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வரைபடக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டார். இக்கண்காட்சியில், பண்டைய சென்னை மாகாணவரைபடங்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்குப் பிறகான சென்னை மாநில வரைபடங்கள், தற்போதைய தமிழக வரைபடம், மாவட்டங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன.
