

சென்னை: பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ஐப் பயன்படுத்தி மோசடி குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என தமிழக டிஜிபிக்கு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
நிலத்தை விற்பதாகக் கூறிரூ.28 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்முன் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பான உரிமையியல் விவகாரத்தி்ல் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 420-ஐப் பயன்படுத்தி குற்றவியல் ரீதியாக மோசடி குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டுமென உத்தரவிட் டிருந்தது.
டிஜிபிக்கு கடிதம்: இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்புக் குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதற்கு உதவியாக மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் செயல்பட வேண்டுமென அறி வுறுத்தியிருந்தது.
அதன்படி மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான உரிமையியல் பிரச்சினைகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ஐப் பயன்படுத்தி மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கும்படி போலீஸாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஏராளமான வழக்குகள் நிலுவை: இதுபோன்ற மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. எனவே மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் முன்பாக போலீஸார் விழிப்புடன் செயல்பட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.