Published : 16 May 2023 06:16 AM
Last Updated : 16 May 2023 06:16 AM
விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி, கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியதால், பள்ளி வளாகம்சூறையாடப்பட்டு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சின்னசேலம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், விழுப்புரம் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் நேற்று மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நடுவர் புஷ்பராணி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, விடுதி வளாகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள், மாணவி இறப்புதொடர்பான ஆய்வக அறிக்கைகள் உள்ளிட்ட 100 ஆவணங்களை போலீஸார் தாக்கல் செய்தனர்.
மாணவி கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இல்லைஎன்றும், தற்கொலைக்கான முகாந்திரம் இருப்பதாகவும், அதேநேரம் பள்ளி நிர்வாகம் விடுதியை முறையாகப் பராமரிக்கவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.
குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நடுவர் நீதிமன்றம், விரைவில் இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT