

புதுக்கோட்டை/திருச்சி/ராமநாதபுரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர், மனைவி விஜயலட்சுமி, மகள்கள் அட்சயா(15), தனலட்சுமி(12), பூமிகா(10) மற்றும் உறவினர் ஆர்.ஆனந்தகுமார்(29) ஆகியோருடன், புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியில் உள்ள மயிலாயி அம்மன் கோயிலுக்கு நேற்று சென்றார்.
அங்குள்ள குளத்தில் அட்சயா, தனலட்சுமி, ஆனந்தகுமார் ஆகியோர் குளித்தனர். அப்போது, நீரில் மூழ்கி அட்சயா, தனலட்சுமி மற்றும் அவர்களைக் காப்பாற்ற முயன்ற ஆனந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2 சிறுவர்களின் உடல்கள் மீட்பு: ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்பு பகுதியில் உள்ள ஆச்சார்ய மான் பட்டர் குருகுலம் வேத பாடசாலையில் தங்கிப் பயின்று வந்த கோபாலகிருஷ்ணன்(17), விஷ்ணுபிரசாத் (13), ஹரிபிரசாத் (14), கிடாம்பி வெங்கடகிரிதர் சாய்சூர்ய அபிராம்(14) ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை மீட்டனர். தீயணைப்பு வீரர்களும், ரங்கம் போலீஸாரும் தேடியதில், விஷ்ணுபிரசாத்தின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில், அழகிரிபுரம் பகுதியில் உள்ள பாலம் அருகே ஹரிபிரசாத், சாய் சூர்ய அபிராம் ஆகியோரது சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள திருவரங்கம் பாக்கியபுரத்தைச் சேர்ந்தவர் இக்னாகி ரிச்சர்ட் (52). அரசுப் பள்ளி ஆசிரியர்.
இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகேஉள்ள அம்பலத்தான் குளத்தில் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, நீரில் மூழ்கி இக்னாகி ரிச்சர்ட் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.