

சென்னை: அன்னையர் தினம், சர்வதேச குடும்ப தினத்தை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியில், தொழில் துறையினர் - படித்த இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, வேலைவாய்ப்புக்கான குறுகிய கால படிப்புகள் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழக தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உமாதேவி பேசியதாவது:
வெளிநாடுகளில் குழந்தைகள் தங்களது மூளையின் எந்த பகுதியை (வலது, இடது) அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற படிப்பைபெற்றோர் கற்றுத் தருகின்றனர். ஆனால், இந்தியாவில் அதுபோன்றமுறை பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகளுக்கு பிடிக்காத படிப்புகளில் சேர்த்து விட்டு, ‘படி படி’என்று பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர்.
தற்போது தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்குத்தான் அதிக சம்பளம் கிடைக்கிறது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு பேசியபோது, ‘‘டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா ஆகிய முன்னெடுப்புகள் மூலம், பொதுமக்களின் திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுயதொழில், தனியார்மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை பெற வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஏ.சி. மெக்கானிக், பிளம்பர், ஃபிட்டர், கார்பென்டர், எலக்ட்ரீஷியன் ஆகிய ஐடிஐ பாடப் பிரிவுகளில் படிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.
கருத்தரங்கில், ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என்.குமரேசன், தக்கர்பாபா ஐடிஐயில் பயின்று தற்போதுமின்வாரியத்தில் பணிபுரியும் சரவணன் ஆகியோர் பேசினர்.
மேலும், தக்கர் பாபா வித்யாலயாவில் அளிக்கப்படும் அழகு கலை நிபுணர் பயிற்சி குறித்து அதன் பயிற்சியாளர் தீபா, மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகுறித்து ஓமியோபதி மருத்துவர் ஆரத்தி ஆகியோர் விவரித்தனர். இக்கருத்தரங்கில் தக்கர் பாபா வித்யாலயா சமிதி செயலாளர் மாருதி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.