Published : 16 May 2023 06:09 AM
Last Updated : 16 May 2023 06:09 AM
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு காணவும், செயற்கை நுண்ணறிவு, இயந்திர அறிவு, நம்பிக்கை இணையம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் சென்னையில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்று 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடி செலவில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம்திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலர் குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் பி. நாயர்,தமிழ்நாடு தொழில்நுட்ப மைய தலைமை நிர்வாக அலுவலர் விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் லாப நோக்கமற்ற நிறுவனமாக இது அமைக்கப்பட்டுள்ளது. புதுமைகளை ஒருசேர அமைப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க ஊக்கியாக செயல்பட்டு, உலக அளவில் தமிழகத்தை முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துவதை இந்த மையம் நோக்கமாக கொண்டுள்ளது.
அரசு, கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இது இணைந்துசெயல்படும். இதன் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, 19 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்ட செலவுக்கு மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 50 சதவீத நிதி வழங்கியுள்ளது. தமிழக அரசு 37 சதவீத நிதியுதவியும், தொழில் நிறுவனங்கள் மூலம் 13 சதவீத நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT