Published : 16 May 2023 06:07 AM
Last Updated : 16 May 2023 06:07 AM
சென்னை: புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை புழல், காவாங்கரை, குருசாந்தி நகர் முதல் தெருவில் வசிப்பவர் நிர்மலா (49). உடல்நலக் குறைவால் கணவர் இறந்த நிலையில், தனது அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுஅதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துகிறார்.
நிர்மலாவின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரைச் சேர்ந்த கணேசன் (65) என்பவரை அணுகியுள்ளார்.
கணேசன் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (40), இஸ்மாயில் (45) ஆகிய இரண்டு தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு மூவரும் நிர்மலா வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். முதலில் பாஸ்கர், இஸ்மாயில் இருவரும் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்துகொண்டிருந்த போது திடீரென அதிலிருந்து விஷவாயு வெளியேறியுள்ளது. இதை சுவாசித்த இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கிச் சரிந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக புழல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் தகவல் அறிந்து செங்குன்றம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கிக் கிடந்த 2 தொழிலாளர்களையும் கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கர், இஸ்மாயில் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் சக்திவேல், புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இறந்த இஸ்மாயிலுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். பாஸ்கருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT