Published : 16 May 2023 06:21 AM
Last Updated : 16 May 2023 06:21 AM
சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுமார் 2.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 1200 குடும்பங்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
ஆனால், பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை எதுவும் அரசு தரப்பில் பொதுவெளியில் விவாதத்துக்கு முன் வைக்கவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களின் குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தயாராகி விட்டனர்.
பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கையை வெளியிட்டு, அது சார்ந்து அரசியல் இயக்கங்கள், மக்கள் அமைப்புகள், பொதுமக்களின் கருத்தறிய வேண்டும். குறிப்பாக, செயற்கை நீர்வழி பாதையான பக்கிங்ஹாம் கால்வாய் மறு சீரமைப்பதற்காக பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாக்காத வகையில், அவர்களை வெளியேற்றுவதை கைவிட்டு, அதற்கான திட்டப்பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்படவுள்ள குடியிருப்புபகுதிகள், குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிப்பதோடு, அவர்களுக்கான மாற்றுக் குடியிருப்பு எவ்விடத்தில் வழங்கப்படும் என்பதுகுறித்தும் அரசு தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்0டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT