

சென்னை: முனைவர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய ‘கதை சொல்லும் குறள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குமாரராஜா முத்தையா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவர் சிவகடாட்சம் தலைமை வகித்தார்.
துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். பின்னர், பொன்முடி பேசியதாவது:
கதை சொல்லி திருக்குறளை புரிய வைத்திருக்கும் முயற்சியை பாராட்ட வேண்டும். தமிழ் வளர வேண்டுமானால், இதுபோன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். கல்லூரி நூலகங்களில் இந்த நூலை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் தமிழ் உணர்வு: தற்போதைய காலகட்டத்தில் இங்கு இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் சிலை, அவரது பெயரில் மாவட்டம், பல்கலைக்கழகம் என திராவிட மாடல் ஆட்சிதான் வள்ளுவருக்கு புகழ் சேர்த்தது.
அதன் தொடர்ச்சியாக, தமிழைவளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். இது திருக்குறளுக்கும், தமிழுக்கும் பெருமைசேர்க்கும் ஆட்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், மருத்துவ, ஊரக நல இயக்குநர் ஜெய.ராஜமூர்த்தி, தமிழ் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரன், முனைவர் சாந்தகுமாரி சிவகடாட்சம், சென்னை பல்கலை.
முன்னாள் தமிழ் துறைத் தலைவர் அரங்க ராமலிங்கம், முன்னாள் மாநில தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், கலைமாமணி பார்வதி கந்தசாமி, ஓவியர் தமிழ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.