Published : 16 May 2023 04:13 AM
Last Updated : 16 May 2023 04:13 AM
கடலூர்: கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இணைய வழியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 19-ம் தேதி கடைசி நாள் என்று கல்லூரி முதல்வர் சி.ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணைய வழியில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புகின்ற மாணவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளில் அனைத்துப் பாடங்களுக்கும் www.tngasa.in என்ற ஒருங்கிணைந்த இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு, விண்ணப்பக் கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை உள்ளடக்கிய அனைத்து செயல் முறைகளையும் மேற்கண்ட இணையதளத்தில் இணைய வழியில் மேற்கொள்ளலாம். மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஏதுவாக இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50, எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.2 ஆக மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அரசுக் கல்லூரியாக உள்ள பெரியார் கலைக் கல்லூரியில் 20 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் (2023-24), பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொதுத்துறை ஆட்சியியல், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், கணினி அறிவியல், கணினிப்பயன் பாட்டியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் மற்றும் காணொலிக் காட்சித் தொடர்பியல் ஆகிய இளநிலை படிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இணைய வழியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் 9345512405, 9843339363 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT