Published : 06 Oct 2017 12:44 PM
Last Updated : 06 Oct 2017 12:44 PM

ஆளுநர் பதவியேற்பு விழாவிலும் அரசியல்: மு.க.ஸ்டாலின் அதிருப்தி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என  மு.க.ஸ்டாலின் ஆட்சேபம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு புதிய முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ராஜ்பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துக்கொள்வது மரபு. அந்த வகையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் பதவியேற்பு விழா முடிந்த பின் வாழ்த்து தெரிவிக்க முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட வேண்டும்.

ஆனால் முறைப்படி முதல்வர், மூத்த அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்த பின்னர் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மற்ற அமைச்சர்களை, விஐபிக்களை அழைத்துக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த, மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு, ஸ்டாலினை அழைக்குமாறு அறிவிப்பாளரிடம் சொல்வதற்காகச் சென்றார்.

ஆனால் அதை எதிர்பார்க்காமல் மு.க.ஸ்டாலின் மேடையில் ஏறி ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்னார். பின்னர் ஆளுநர் பதவியேற்பு விழா தேநீர் விருந்தில் பங்கேற்காமல் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”ஆளுநர் பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள் அதன் பின்னர் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற முறையில் நான் சென்றேன். 

ஆனால் ஓர் அதிகாரி என்னை தடுத்து நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பிறகு நீங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் அமைச்சர்களும் நீதிபதிகள் வாழ்த்துச்சொன்ன பிறகே வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் அதுதான் மரபாக இருக்கும் என்றேன். ஆனால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்ன பிறகு என்னை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டேன்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x