Published : 25 Sep 2017 11:51 AM
Last Updated : 25 Sep 2017 11:51 AM

டெங்கு மரணத்தைத் தடுக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ட்விட்டரில் காட்டம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தைத் தடுக்காத அரசு அகல வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கமலுக்கு பதிலளித்தனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து இரண்டு ட்வீட்கள் பதிவு செய்தார்.

"செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்" என்றும் "அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்" என அடுத்தடுத்து இரண்டு ட்வீட்களை பதிவு செய்தார்.

கமலின் இந்த ட்வீட் தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சியின் சுகாதார துறை மூத்த அதிகாரி ஒருவரை 'தி இந்து' (ஆங்கிலம்) அணுகியபோது, "டெங்குவால்தான் அந்த மாணவர் இறந்தாரா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்னும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவில்லை. இருப்பினும், நாளை சுகாதார துறை ஊழியர்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வர்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x