Published : 15 May 2023 02:17 PM
Last Updated : 15 May 2023 02:17 PM

சென்னை புறநகரில் 25 கி.மீ நீள சாலைகளை அகலப்படுத்த திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

சென்னை: சென்னை புறநகரில் 25 கி.மீ நீள சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென் மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை (Omni Bus Idle Parking) நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் திறந்து வைக்கப்படும். கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முடிவுற்றப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கிலோமீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கிலோ மீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் அமையுள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் (Omni Bus Idle Parking) இடம் தேர்வு செய்வதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x