

சென்னை: மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 பேர் மரணம் அடைந்தனர். மேலும் பலர் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்று வந்தனர்.
இந்நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் விழுப்புரம் செல்ல உள்ளார்.
விழுப்புரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நேரில் தெரிவிக்கிறார்.