2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 26 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: அண்ணாமலை நம்பிக்கை

2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 26 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: அண்ணாமலை நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். அதேநேரத்தில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முயற்சிக்க வேண்டும்.

பிரதமர் மோடி மீது கர்நாடக மக்கள் கொண்டுள்ள அன்பு குறையவில்லை. அம்மாநிலத்தில் பாஜக கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. கர்நாடகாவில் கடந்த 38 ஆண்டுகளாக, ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை. மேலும், கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு வங்கி குறையவில்லை.

வாழ்வில் வெற்றி பெறுவதைவிட, தோல்வி அடையும்போது நிறைய அனுபவம் கிடைக்கும். கர்நாடக தேர்தலில் மிகப்பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி பெறச் செய்ய உதவும். 2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 26 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும்.

பாஜகவில் இளைஞர்கள் நிறைய பேர் போட்டியிட்டனர். எனினும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழக முதல்வருக்கு பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது கிடையாது. அதிமுக மட்டுமே தக்கவைத்துள்ளது. சித்தராமையா சிறந்த தலைவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல, டி.கே.சிவக்குமாரும் தகுதி வாய்ந்தவர். யார் முதல்வராக வந்தாலும் சரி, கர்நாடகா காங்கிரஸ் நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல தயவு செய்து மேகேதாட்டு அணையைக் கட்டி விடாதீர்கள். அப்படி கட்டினால், முதல் போராட்டம் பாஜக சார்பில் நான் நடத்துவதாக இருக்கும். கர்நாடகாவில் அமையும் புதிய ஆட்சிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மேகேதாட்டு வேண்டாம் என்று முதல்வர் குறிப்பிட்டு இருந்தாரா என்று பார்த்தேன். ஆனால், அதுபற்றி முதல்வர் எதுவும் குறிப்பிட்டு இருக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in