

சென்னை: நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்காக கட்டப்பட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய வீடுகளை நொச்சிக்குப்பம் மக்களுக்கே வழங்க வேண்டும் என மீனவசங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் பி.ரவி, இந்திய மீனவர்கள் சங்க தலைவர் எம்.டி.தயாளன், தமிழ்நாடு மீனவ முற்போக்கு சங்கத்தின் தலைவர் கே.ஜெகதீசன் உள்ளிட்ட பல்வேறு மீனவ சங்க பிரதிநிதிகள் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், நொச்சிக் குப்பம், நொச்சி நகர் பகுதிகளில் வாழும் விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்காகவும், நொச்சிகுப்பம் நொச்சி நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்காகவும் 1,188 குடியிருப்புகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சிபொறுப்பேற்றவுடன் இதில் 540 வீடுகளைடும்மிங் குப்பம் மற்றும் செல்வராஜ்புரம் பகுதி மக்களுக்கு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் அமைதி வழியில் 4 நாட்கள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மீனவதலைவர்கள் கு.பாரதி, ச.ரூபேஸ்குமார், ஜெ.கோசுமணி மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள எஞ்சிய 864 வீடுகளை நொச்சிக்குப்பம், நொச்சிநகர் மீனவ மக்களுக்கு வழங்கவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவ தலைவர்களை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யவும், இந்தப் பிரச்சினை தொடர்பாக சுமார் 350 மீனவஆண்கள், பெண்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.