

சென்னை: பல் பிடுங்கிய விவகாரத்தில் சிக்கிய பல்வீர் சிங்குக்கு மாற்றாக அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாக கோவை உதவி ஆணையர் சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்தபல்வீர் சிங், விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களின் பற்களைப் பிடுங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டார்.
இவ்விவகாரம் தொடர்புடைய காவலர்கள் ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது திருநெல்வேலி எஸ்.பியாக இருந்த சரவணனும் டிஜிபி அலுவலகத்தின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதேபோல் உளவுத்துறைப் போலீஸாரும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் பல்வீர் சிங் மீது வழக்குப் பதிந்து விசாரணையை முன்னெடுத்தனர். இதுவரை அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாக கோவை மாநகர உதவி ஆணையர் சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.