Published : 10 Oct 2017 07:28 PM
Last Updated : 10 Oct 2017 07:28 PM

குட்கா விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரும் திமுக வழக்கு: அக்டோபர் 23 விசாரணைக்கு வருகிறது

குட்கா முறைகேடு வழக்கை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க கேட்டு திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு வரும் அக்.23 அன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக தமிழகக் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வணிகவரித்துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றில் பணியாற்றும் 17 அதிகாரிகள் மட்டுமே இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவருமே உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர். சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி தரும் அதிகாரம் இந்த அதிகாரிகளில் ஒருவருக்குக் கூட இல்லை. குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து எதுவும் இல்லை என்ற நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சார்பில் குட்கா வழக்கு குறித்து செய்யப்பட்ட முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலே இருந்தது.

அந்த மனுவில் குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதால் மாநில அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது ஆகவே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தேதி அறிவிக்கப்படாத நிலையில், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விவகாரத்தில் கீழ் நிலை அதிகாரிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு திமுக முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க கேட்டுக்கொண்டனர்.

இந்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர் அதிகாரிகள் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதால் வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி அன்பழகன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை( அக்.13) வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது. தீபாவளி விடுமுறைக்கு பின் அக்டோபர் 23 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x