Last Updated : 27 Oct, 2017 08:23 AM

 

Published : 27 Oct 2017 08:23 AM
Last Updated : 27 Oct 2017 08:23 AM

மழை எச்சரிக்கை, குஜராத் தேர்தல் காரணமாக எழுச்சி பயணத்தை ஜனவரிக்கு தள்ளிவைக்க ஸ்டாலின் முடிவு

நவம்பர் 7 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை திட்டமிட்டிருந்த எழுச்சிப் பயணத்தை வரும் ஜனவரிக்கு தள்ளிவைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

கடந்த 20-ம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், நவ.7 முதல் டிச.7-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார். அதன்படி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நவ.7-ம் தேதி எழுச்சிப் பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின் தொடக்க விழா அல்லது நிறைவு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், மழை எச்சரிக்கையால் எழுச்சிப் பயணத்தை ஜனவரியில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘2016 பேரவைத் தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பாணியில் எழுச்சிப் பயணத்தை திட்டமிட்ட ஸ்டாலின், இம்முறை முக்கிய நகரங்களில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை பங்கேற்கச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பர், டிசம்பரில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால் தேசியத் தலைவர்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே, எழுச்சிப் பயணத்தை ஜனவரிக்கு தள்ளிவைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்’’ என்றார்.

இதற்கிடையே கட்சி நிர்வாகிகள், எழுச்சிப் பயணத்துக்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். கனமழை, குஜராத் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளும் பயணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் ஸ்டாலின் இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x