Published : 15 May 2023 06:24 AM
Last Updated : 15 May 2023 06:24 AM
திருப்பத்தூர்: தன்னுடைய இறப்பு சான்றிதழை ரத்து செய்ய அதிகாரிகளிடம், ஆம்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னமலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு (60). இவர், ஆம்பூரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அப்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக விரக்தியடைந்த அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால் அவரது குடும்பத்தார் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி யிருந்தபோது ஸ்ரீராமுலு உயிரிழந்து விட்டதாக கூறி ஆம்பூர் நகராட்சியில் கடந்த 2003- ம் ஆண்டு அவருடைய இறப்பு சான்றிதழை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீராமுலு திடீரென தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்று குடும்பத்தாரை பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் குடும்பத்தாரே பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடைய இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனு அளித்துள்ளார்.
மனு அளித்து கடந்த 10 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் வருவாய்த் துறையினர் எடுக்கவில்லை எனக் கூறி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு முதியவர் ராமுலு நடையாய் நடந்து வருகிறார்.
இந்த வயதான காலத்தில் தன்னை அதிகாரிகள் அலைக் கழிப்பதாகவும், உடனடியாக தன்னுடைய இறப்பு சான்றிதழை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராமுலு மாவட்ட ஆட்சியருக்கு தனது கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT