Last Updated : 14 May, 2023 06:48 PM

5  

Published : 14 May 2023 06:48 PM
Last Updated : 14 May 2023 06:48 PM

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது; இதுதான் திமுக அரசின் சாதனை: சி.வி. சண்முகம்

விழுப்புரம்: கள்ளச்சாராய வழக்கில் கைதான திண்டிவனம் 20-வது வார்டு திமுக பெண் கவுன்சிலரின் கணவரை விடுவித்ததேன் என்று சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக எக்கியார்குப்பம் வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''விழுப்புரம் மாவட்டக் காவல்துறை செயல்பாடற்ற நிலையில் இருப்பதை இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நிரூபித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும், கஞ்சா, கஞ்சா சாக்லேட், போதை ஊசி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பால் பாலியல் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. பாக்கெட் சாராயம் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காரணம், திறைமையாக செயல்படக்கூடிய காவல்துறையை முடக்கியது திமுகவினர் தான்.

விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கோயில், பள்ளிகள் முன்பு போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதால், பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் அதற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது. இது தான் திமுக அரசின் சாதனை. இதுதொடர்பாக காவல்துறையில் அதிமுக பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்த விற்பனையை ஊக்குவிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளார். கள்ளச்சாராய வழக்கில் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திண்டிவனம் நகர்மன்ற 20-வது வார்டு திமுக பெண் கவுன்சிலரின் கணவர், வீட்டிலேயே சாராயம் தயாரித்து, பாக்கெட் போட்டு விற்பனை செய்துவருகிறார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் எந்த பின்னனியில் விடுவிக்கப்பட்டார். பின்னணியில் உள்ள அந்த திமுக உயர் மட்டப் பொறுப்பு வகிக்கும் நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? அந்த நபரால் இந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெற்றிருக்கக் கூடும். இது உளவுத்துறைக்கு தெரியாதா என்ன? அந்த பாக்கெட் சாராயத்தை விற்றவரால் இந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x