

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை நவீன கருவி மூலம் போலீஸார் சோதனை செய்த பிறகு அதன் மீது சோதனை செய்யப்பட்டதற்கான அத்தாட்சி ஸ்டிக்கர் ஒட்டும் புதிய நடைமுறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரயில் நிலைய மேலாளர் எஸ்.கோவிந்தசாமி கலந்துகொண்டு பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினார். பின்னர் அவற்றை ரயில்களிலும் ஒட்டினார்.
அதில் இரவு நேரங்களில் ஜன்னல் கதவுகளை மூடி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் வழங்கும் உணவுப் பண்டங்களை வாங்கக்கூடாது. கேட்பாரற்று கிடக்கும் பொருள்கள் குறித்தோ, முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத அல்லது பயணச்சீட்டு இல்லாத யாரேனும் பயணம் செய்வது குறித்தோ ரயில்வே உதவி மைய செல்போன் எண் 9962500500-ஐ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
பின்னர் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, பயணிகளின் உடைமைகளை நவீன கருவியில் சோதனை செய்து அவற்றின் மீது சோதனை செய்யப்பட்டதற்கான அத்தாட்சியாக ஸ்டிக்கர் ஒட்டும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார்.
இது குறித்து ரயில்வே காவல் நிலைய டிஎஸ்பி மு.தில்லை நடராஜன் கூறியதாவது: பரிசோதிக்கப்பட்ட பயணிகளின் உடைமைகள் மீது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நாள்களில் மட்டும் அத்தாட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தது. புதன்கிழமை முதல் தினந்தோறும் ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கேட்பாரற்று பைகள் கிடப்பது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். மேலும் பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கப்படும் இடங்களில் சோதனை செய்யப்பட்டதற்கான அத்தாட்சி ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே அனுமதிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார் அவர்.