Published : 20 Oct 2017 07:59 AM
Last Updated : 20 Oct 2017 07:59 AM

பட்டாசு புகையால் திணறியது சென்னை: காற்று மாசு 4 மடங்கு அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளியின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் சென்னை நகரமே திணறியது. 4 மடங்கு வரை காற்று மாசு ஏற்பட்டதாகவும், அன்றைய தினத்தில் நிலவிய வானிலையே இதற்கு காரணம் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது.

தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மக்கள் பயந்தபடி தீபாவளியன்று மழை பெய்யவில்லை. அதனால், பட்டாசு விற்பனை களைகட்டியது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே பல இடங்களிலும் பட்டாசுச் சத்தம் கேட்டபடி இருந்தது. மாலையில் வாண வேடிக்கைகளும் தொடங்கின. மாலை 4 முதல் இரவு 10.30 மணி வரை மாநகரம் முழுவதும் ஓயாது சர வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இதனால், சென்னை மாநகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. சுவாசக் கோளாறு உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். பலர் கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டனர். நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். வரலாறு காணாத காற்று மாசுவால் ஒட்டுமொத்த சென்னையும் திணறியது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாகவும், தீபாவளி தினத்தன்றும் நகரில் 5 இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசின் அளவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 12-ம் தேதியும் தீபாவளி நாளான அக்டோபர் 18-ம் தேதியும் 24 மணி நேர காற்று தர ஆய்வும், 6 மணி நேர ஒலி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் , நுங்கம்பாக்கம் (குடியிருப்பு பகுதி), சவுகார்பேட்டை (கலப்பு பகுதி), தியாகராய நகர் (வர்த்தக பகுதி) ஆகிய 5 இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது, கந்தக டை-ஆக்சைடு, நைட்ரஜன் டை-ஆக்சைடு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டும், காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (காற்று மாசு) அதிகமாக இருந்ததாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 மடங்கு வரை காற்று மாசு அதிகரித்துள்ளது. அதிலும் சவுகார்பேட்டையில் மிகக் கடுமையாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதாவது, அப்பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 777 மைக்ரோ கிராம் மிதக்கும் நுண் துகள்கள் (PM10) இருந்ததாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கன மீட்டர் காற்றில் அனுமதிக்கப்பட்ட நுண் துகள்களின் அளவு 100 மைக்ரோ கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மாசு, இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்தது. இதற்கு, தீபாவளி நாளில் சென்னையில் நிலவிய வானிலையே காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x