Published : 14 May 2023 06:55 AM
Last Updated : 14 May 2023 06:55 AM
கோவில்பட்டி: கடலில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி கீழவைப்பார் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் என்பவரின் நாட்டுப்படகில் ஜெனிபர், எக்கிளிண்டன், மூர்த்தி, ஆரோக்கியம் ஆகிய 4 மீனவர்கள் நேற்றுமுன்தினம் பகலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கீழவைப்பார் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த படகின் மேற்பகுதியில் தொற்றிக்கொண்டு 4 மீனவர்களும் போராடிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால், கீழவைப்பாரில் இருந்து 5 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் இரவில் கடலுக்கு சென்று தேடினர்.
அப்போது நடுக்கடலில் பலமணி நேரமாக தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் பார்த்து, அவர்களை மீட்டு நேற்று காலை கரைக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட 4 மீனவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT