

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை ரயில்வே போலீஸார் துரிதமாக இயங்கி காப்பாற்றும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.25 மணியளவில் கரூரைச் சேர்ந்த ரவிக்குமார் தனது மனைவியுடன் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் ஜங்ஷன் வந்தடைந்தார்.
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கி, கரூர் செல்ல ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி காத்திருந்தனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, ரயில் நிற்பதற்கு முன்பாக ரவிக்குமாரின் மனைவி ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது தவறி நடைமேடையில் விழுந்தார்.
இதனைப் பார்த்த கணவர் ரவிக்குமார், ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்தபோது தவறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழவும், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அஜித் துரிதமாக செயல்பட்டு, எந்த காயமும் இல்லாமல் ரவிக்குமாரை மீட்டார்.
இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகபரவி வரும் நிலையில், போலீஸாரின் சமயோசிதமான நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.