

சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை சத்திய மூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, "கர்நாடக ஆட்சி மாற்றம், மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான தொடக்கம்.இந்த தீர்ப்பு 2024 மக்களவைத் தேர்தல், இதர மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும்" என்றார்.
காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இள.பாஸ்கர், மாவட்ட தலைவர்கள்சிவ.ராஜசேகரன், முத்தமிழன், டில்லிபாபு உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் வாழ்த்து: இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
>அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சர்வாதிகாரம், மதவாதம், மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும்.
>மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து விட்டது.
>தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்
>இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: ஆர்எஸ்எஸ், பாஜகவின் சூழ்ச்சிகளை உணர்ந்த கர்நாடக மக்கள்,வகுப்புவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி, படுதோல்வி அடையச் செய்திருப்பதை வரவேற்கிறோம்.
>மநீம தலைவர் கமல்ஹாசன்: பிரிவினையை நிராகரிக்க, கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். உங்கள் வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்துக்கும் பாராட்டுகள்.
>மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாஜகவின் வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளி, நல்லிணக்க அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள கர்நாடகா மக்களுக்கு நன்றி. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்.