

ஈஞ்சம்பாக்கம்: கர்நாடக மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தெரிவித்துள்ளார்.
ராஷ்டீரிய லோக் ஜனசக்தி கட்சியின் (ஆர்.எல்.ஜே.பி) தமிழ்நாடுமாநில மாநாடு மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்கு ஒன்றிலும் பூந்தமல்லியிலும் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சரும் ராஷ்டீரிய லோக் ஜனசக்தி கட்சியின் (ஆர்.எல்.ஜே.பி) தலைவருமான பசுபதிகுமார் பராஸ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் கட்சியின் தேசியபொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.பி.சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டுக்கு வந்த அமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநில தேர்தல் முடிவானது நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றார். மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இதுபோன்று சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே ஏற்படுவதாகவும், கலவரத்தை தடுக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.