Published : 14 May 2023 04:15 AM
Last Updated : 14 May 2023 04:15 AM
புதுச்சேரி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திய நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மற்றும் கட்சியினர் வைசியாள் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக ராஜா திரையரங்கம் நோக்கி சென்றனர். அங்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநில மக்கள் பாஜக மீது வெறுப்போடு இருந்தார்கள். அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் செய்து, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தேர்தல், நடைபெற இருக்கிற மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 19 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT