Published : 14 May 2023 04:20 AM
Last Updated : 14 May 2023 04:20 AM
தூத்துக்குடி / கோவில்பட்டி: கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் 169, திருச்செந்தூரில் 200, கோவில்பட்டியில் 269 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
வாகனத்தின் முன்பும், பின்பும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கீழவைப்பார் கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் வல்லத்தில் கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் இரவில் வெகுநேரம் கரைக்கு திரும்பவில்லை. மீன்வளத்துறை, கடலோர காவல் படையினர் வல்லத்தில் சென்று தேடி, அவர்களை கண்டுபிடித்து, மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர்” என்றார். உதவி ஆட்சியர் கவுரவ் குமார், நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் உடனிருந்தனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன், வட்டாட்சியர் வசந்த மல்லிகா, மோட்டார் வாகன ஆய்வாளர்சுரேஷ் விஸ்வநாத், பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 79 பள்ளிகளைச் சேர்ந்த 265 வாகனங்கள் உள்ளன. இவற்றில் நேற்று 199 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட 12 வாகனங்களுக்கு, குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வில் தகுதியாக இருந்த187 வாகனங்களுக்கு முன்புற கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் மா.சுந்தரராஜ் தலைமையிலான வீரர்கள் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு செயல்விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் நுட்பநர் மகேஸ்வரி முதலுதவி குறித்தும், உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT