Published : 14 May 2023 04:10 AM
Last Updated : 14 May 2023 04:10 AM

மக்கள் நீதிமன்ற முகாம்களில் ரூ.39.92 கோடிக்கு இழப்பீடு

வேலூர் / திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாம்களில் 4,373 வழக்குகளில் ரூ.39.92 கோடிக்கான இழப்பீடு வழங்கப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதி மன்ற முகாம் நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான வசந்தலீலா தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. இதில், மோட்டார் வாகன விபத்துகள் மற்றும் அசல் வழக்குகள், வங்கி வாராக்கடன், காசோலை வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 18 அமர்வுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 728 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 2 ஆயிரத்து 203 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.32 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 729 வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் திருவண்ணா மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவருமான ஜி.மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நடுவரும், செயலாளருமான பி.ஈஸ்வர மூர்த்தி வரவேற்றார்.

நிலுவையில் உள்ள 7,342 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,170 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விவசாய கடன், கல்விக்கடன் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதில், வங்கிகளில் நிலுவையில் உள்ள 182 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1,52,96,749 வசூலிக்கப்பட்டன. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 1,988 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, நஷ்டஈடாக ரூ.6,21,00,165 வழங்கப்பட்டது. இதன்மூலம், 2,170 வழக்குகளில் ரூ.7,73,96,914 தீர்வு காணப்பட்டது. முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.மதுசூதனன் மரக்கன்று நட்டு வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x