

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 33,324 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் ச.கருப்பையா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 33,324 ஏக்கரும், தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அரசியல்வாதிகள் மற்றும் பிற ஜாதியினர் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கமும் பஞ்சமி நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. தண்டராம் பட்டு அடுத்த மலமஞ்சனூர் கிராமத்தில் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து பேருந்து நிழற்குடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளன.மேலும், கிரானைட் குவாரிகளும் இயங்குகின்றன.
திருவண்ணாமலை நகரம் தேனிமலையில் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டும், உரியவரிடம் ஒப்படைக்கவில்லை. மயான பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. 136 கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு மயானம் இல்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வில்லை. திருவண்ணாமலை நகராட்சியில் பல மோசடிகள் நடைபெறுகின்றன.
பேருந்து நிலையத்தில்இலவச கழிப்பறையில் கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுகிறது. சிறு வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். மயான தகன மேடையில் ரூ.1,500 என கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதனை ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றும் பலனில்லை. கட்டண கொள்ளை தடுக்கப்படவில்லை.
சமூக நீதியை பாதுகாக்கும் முதல்வர், பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுக்காத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவு என்பது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். வரும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதவாத கும்பல் தூக்கி எறியப்பட வேண்டும். ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்” என்றார்.