டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

விஜயகாந்த் | கோப்புப்படம்
விஜயகாந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கடந்த 2018ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி முத்தவர்கள் அதிகளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர்.

இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில், 2 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது. குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயராகி கொண்டிருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகிப் போய்விடுவோமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறியிருந்தது. ஆனால் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in