Published : 13 May 2023 06:01 AM
Last Updated : 13 May 2023 06:01 AM
சேலம் / சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 69-வது பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் அதிமுக-வினரால் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து வரும் பிறந்தநாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பொதுச்செயலாளர் பழனிசாமியின் வீட்டுக்கு நேற்று வந்து அவருக்கு பூங்கொத்து, சால்வை, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், 45 வகை சீர்வரிசைகளுடன் அதிமுகவினர் திரண்டு வந்து, பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். அதிமுகவினர் கொண்டு வந்த 69 கிலோ கேக்கை வெட்டிய பழனிசாமி, கேக்கை தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியடைந்தார்.
மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஏ.பி.சக்திவேல், எம்.கே.செல்வராஜு ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியும் வந்திருந்து, பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து: தம்பிதுரை, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கேபி.முனுசாமி, அன்பழகன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சம்பத், எம்எல்ஏ-க்கள் உட்பட ஏராளமானோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொலைபேசி வழியாக பழனிசாமியை தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT